Sunday, August 20, 2006

மனிதக்காடு

தொலைந்த குழந்தையை
தேடிக்கொண்டிருந்தேன்
கிடைக்கவில்லை

எங்கு தொலைந்தது

பேருந்தில் ஏறும்போது
பள்ளிவிட்டு வந்தவேளை
அம்மாவின் கைமறந்து
யார் பின்னாலோ ஓடி
முகவரி மறந்து
எப்படி போயிருக்கும்

தொலைந்த குழந்தையை
தேடிக்கொண்டிருந்தேன்

இருளில் மறைந்திருக்குமா
கடல் குடித்திருக்குமா
தேசம் கடந்து எங்காவது

தொலைந்த குழந்தையை
தேடிக்கொண்டிருந்தேன்

பசியால் அழுமா
நிலவை வேடிக்கைப்பார்த்து
அழுகை நிறுத்துமா
வாகனம் அழுத்தும்
உலோக சாலையில்
ஒதுங்கி நிற்குமா
கால் சூட்டுக்கு
நிழல் தேடுமா
மனிதக்காடு பார்த்து
பயப்படுமா

தொலைந்த குழந்தையை
தேடிக்கொண்டிருந்தேன்

தேடத்தேட
கடைசியில்
தொலந்த குழந்தை
யாரென்று தெரிந்தது
அது என் வயதுக்குள்
புதைந்து போயிருந்தது

1 comment:

  1. ஒவ்வொருவருக்குள்ளும் இது போல தொலைந்து போன ஒரு குழந்தை இருப்பது உண்மைதானே?

    ReplyDelete