Tuesday, January 29, 2008

சிதையும் சொற்கள்

மறையும் சூரியன்
கவிதையில் உதிப்பது
அழகாய் இருக்கிறது

ஆனாலும்
சொற்களைச் சிதைக்கிறது
சுள்ளிப் பொறுக்கும் கிழவி
வீடு சேர வேண்டும்
என்ற யோசனை

கிழவியைப் பின்தள்ளிப்
போகிறது ரயில்
சத்தலயம் பிசகாமல்

Monday, January 21, 2008

மணக்கும் இசை

நிரம்பி வழியும்
அரங்கிலிருந்து
மணக்கிறது இசை

என் அளவுக்கு
சுவாசிக்கத் துவங்குகையில்
பூக்கும் சில பூக்கள்
ஆடுகின்றன
ஒலி லயத்திற்கு ஏற்ப

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)
மலைகளை வரைபவன்
ஏறிக்கொண்டிருக்கிறான்
கோடுகள் வழியே

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)

Sunday, January 20, 2008

நூற்று எழுபத்து எட்டாம் பக்கத்தில்...

எனது கதையில்
வரும் கிழவி
உங்கள் ஊருக்கு வந்தால்
ஏதாவது கொடுங்கள்

சர்க்கரை குறைவான காப்பி
வேகவைத்த கடலை
ஒரு குவளை கஞ்சி
ரசம் சாதம்
முடியாவிட்டால் வெந்நீர்

அவள் சொல்வதைக்
கேட்க முடியாதபோது
ஒரு புன்னகைக் கொடுத்து
அனுப்பி விடுங்கள்

சிறு வயதில் இறந்த பேரன்
வெளிநாடு போய்
திரும்பாத மகன்
நிலங்களைத் தொலைத்தக் குடும்பம்
என உண்டு அவளிடம்
கண்ணீர் உடைக்கும் கதைகள்

நதி பார்த்தால்
நின்று விடுவாள் கிழவி
அவளை இறக்கி விடாதீர்கள்
நீச்சல் தெரியாது

கிழவிக்கு
எந்த சேதாரமும் நேராமல்
உடனே அனுப்பி வையுங்கள்

கதையின் நூற்று எழுபத்து எட்டாம் பக்கத்தில்
கிழவிக்கு மரணம் நிகழ்ந்தாக வேண்டும்
நீரில் மூழ்கி

Thursday, January 10, 2008

சிறுமியின் மரம்

தாத்தாவுடன்
வாக்கிங் போய்விட்டு
வந்த பேத்தி
அவர் கால் கழுவி வருவதற்குள்
வரைந்ததைக் காட்டினாள்

பேத்தியின் பிஞ்சு கிறுக்கலில்
நிமிர்ந்து நின்றது
ஒரு மரம்

கன்னத்தைத் தட்டி
பாராட்டு சொன்ன
தாத்தாவைக் கேட்டாள் சிறுமி

இது எந்த மரம் சொல்லுங்க

விழித்து நின்ற தாத்தாவுக்கு
விடை சொன்னாள்

நடந்து போனப்ப
நாம பாத்தமே
நீங்க கூட சொன்னீங்களே
இது புயல்ல சாஞ்ச மரம்னு

அதுதான் தாத்தா இது
நான் நிக்க வச்சிருக்கேன்