Friday, June 11, 2010

கிடைத்து விட்டது

இன்னும் பெயரிடாத
என் புதிய நாயுடன்
கடற்கரையில்
நடந்து கொண்டிருந்தேன்

சிநேகமாக வந்தது
கடலைப் பார்த்தது
கை கயிற்றை
சற்றே விட
கூடுதல் சுதந்திரத்துடன்
ஓடிப்போய்
மண்ணைக்கீறி விளையாடியது
நண்டைப் பார்த்து மிரண்டது
ஒளி வாங்கி ஓடியது
பின் என்னோடு வந்து
சேர்ந்து கொண்டது

வீடு திரும்புகையில்
உனக்கு என்ன பெயர்
வைக்கலாமென்று
அதனிடம் கேட்டேன்
குரைத்தது

அந்த சத்தத்திலிருந்து
விழுந்த சொற்களில்
எதுவும் பெயர்
ஒலிக்கவில்லை

கயிற்றின் அதிர்வு
கைக்கு இதமாக இருந்தது

நாய் கதாபாத்திரங்கள் வரும்
கதைகளினூடே போய்
ஏதாவது பெயர் கிடைக்குமா என
பார்த்து திரும்பியது மனது

வைக்கப்போகும் பெயருக்கு
ஒரு விஷேசம்
தேவைப் பட்டது

நல்ல பெயர்
கிடைக்கும் வரை
காத்திருக்க வேண்டியதுதான்

அதுவரை பெயரிடப்படாமல்
கழியட்டும் நாட்கள் என்று
நினைத்தபடி பார்க்க
வேகமாக சாலை கடந்த நாயை
டேய் அன்பு
எனச் சத்தமிட்டேன்

அழகாக ஓடி வந்து
காலை நக்கியது

கிடைத்து விட்டது

எனக்குப் பெயரும்
அதற்கு நானும்

3 comments:

  1. 'அன்பு' இதை விட ஒரு நல்ல பெயர் கிடைக்காதுங்க. அன்பினில் உண்டு ஆயிரமாயிரம் விசேஷங்கள். "........ அது மனிதர்க்கு தோழனடி பாப்பா........" என்னும் பாரதி வரிகள் நினைவுக்கு வருது.

    ReplyDelete
  2. பரிசு ஒரு அன்பு முத்தம்

    ReplyDelete