Monday, December 27, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

295-

சுழற்றிய கயிறு பார்க்க
சுற்றும்
நிற்காத பம்பரம்

296-

சொற்களின் மத்தியில் அமர்ந்து
ஊதித் தள்ளுகிறேன்
அர்த்தத்தின் தூசிகளை

அனுபவ சித்தனின் குறிப்புகள்

293-

வானத்தை
தாண்டவேண்டும்

எப்படி

கீழே இருப்பவர்களிடம்
கேட்காதீர்கள்

வானத்திடமே கேளுங்கள்
சொல்லிவிடும்

294-

உதிர்ந்த பூவின்
அருகில் கிடந்தன
ஊமை வார்த்தைகளும்

நீர் வளையங்கள்

குளத்தின் நிதானத்தை
அமைதியாய் உணர்ந்தான்

கையிலிருந்த
கல்லெறிய
பேரமைதியைக் கண்டான்

நீந்தி வந்த
நீர் வளையங்களைப்
பிறகு பார்த்தான்

அமைதியாக
பேரமைதியாக

Sunday, December 26, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

290-

நீண்ட தூரம்
போய்ப் பார்த்தேன்
தென்படவில்லை
தாளில் எதுவும்

291-

தற்கொலையை மறுப்பவன்
தூக்குக் கயிறை வரைந்து
கிழித்துப் போடுகிறான்

292-

போய் வா
என்றான்

வந்தபின்
போ போ
என்றான்

போகையில்
வா வா
என்றான்

இதையே
சொன்னான்
போனபின்னும்

தன்
நிழலிடம்

Friday, December 24, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

285-

இருளில்
நீந்தி நீந்தி மேலேறுவது
பிடித்திருக்கிறது

286-

விரல் நுனியில் கண்ணீர்துளி
உதிர்ந்த காரணத்தைச் சொல்லாமல்
கரைந்து போனது காற்றில்

287-

பார்க்காமல் விட்ட பறவை
வந்தமர்ந்தது
கனவின் கிளையில்

288-

பிறக்காத மொழி ஒன்றை
பேசியது
பிறந்த குழந்தை

289-

பதிலைப் போல்
கிடைத்தது
கேள்வி

கரும்பலகை

ஓய்வு பெறப்போகும் ஆசிரியர்
கரும்பலகையில்
வாழ்த்துக்களை
எழுதும் மாணவர்கள்

கடிதம்

திசைகள் தேடி
பறந்து போனோம்

வந்து
வருஷங்களாயிற்று

ஊருக்கு
ஒரு கடிதம்
எழுதுகிறேன்

Thursday, December 23, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

282-

வார்த்தைகளுக்கு
நடுவில் நுழைந்து
வெளியேறுகிறேன்
உரையாடலிலிருந்து

283-

வசிக்க
கற்றுக்கொள்கிறேன்
கனவுக்குள்ளும்

284-

பிஞ்சுக்கரம் விளையாட
குழந்தையாகும்
மழையும்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

280-

யார் மீதும்
கோபம் வருவதில்லை
வருகிறது
என் மீது

281-

அழைக்கிறது மலை
முடிந்து போகாதே
அடிவாரப் புற்களோடு

Wednesday, December 22, 2010

பார்க்கும் மரம்

புன்னகை குறைக்காமல்
மென்று முழுங்குகிறேன்
வேப்ப இலையை
பார்க்கிறது மரம்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

277-

மரணத்தைப் போல்
சுமந்து செல்கிறீர்கள்
போட்டுவிட்டுப் போங்கள்

278-

விழாத நான்
தூக்கினேன்
விழுந்த என்னை

279-

என்னை எனக்கு
எதிரியாக
அறிமுகப்படுத்திய
நண்பரை சந்தித்தேன்

எனக்கு நான்
நண்பனானது குறித்து
சந்தோஷப்பட்டார்

Monday, December 20, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

270-

குற்றம் செய்
குற்றம் அழிக்கும்
குற்றம் செய்

271-

தற்கொலைக்கு முன்
குடிக்கும் தேநீர்
வரியில் தொங்கியது
உயிரின் கயிறு

272-

உடன் வந்தவர்கள்
ஓடிப்போனார்கள்
கத்தி எறியப்போகிறவன்
கடைசி முறை
சிறுநீர் கழித்துவிட்டு
வரச் சொல்கிறான்

273-

வாய் அதக்கி
சேர்த்து
நசுக்கி
ரத்தம் பாயந்த
வார்த்தைகளைத்
துப்பிவிட்டு நடந்தேன்
பேச எதுவுமில்லை

274-

நஞ்சு கலந்திருக்கிறது
சொற்களின் வசீகரத்தில்
மயங்கிவிடாதீர்கள்

275-

கண் மூட
சுழலும் மெளனம்
காதோரம்

276-

எண்ணும் போதெல்லாம்
கூடிப்போகின்றன
அள்ளி வந்த பொய்கள்

Sunday, December 19, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

267-

புள்ளிக்குள்
விழுந்த பாறை
எடுக்கும்போதெல்லாம்
புள்ளியாகிவிடுகிறது

268-

விடிவதற்கு
இன்னும் நேரமிருக்கிறது
என்ற வரியையே
எழுதிக்கொண்டிருந்தேன்
விடியும் வரை

269-

உடையும்போதெல்லாம்
உருவாகிறது
உடைத்தது

Wednesday, December 15, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

261-

வார்த்தைகளுக்கிடையில்
நிசப்தம்
தொட்டுப் பார்க்கும் கவிதை

262-

அன்பு
மையம்
பிரபஞ்சம்
வட்டம்

263-

எப்போதும் போல்
இப்போது சிரித்தீர்களா

ஆமாம்

எப்போதும் போல
இப்போது அழுவீர்களா

எப்போதும் போல் மனிதர்கள்
எப்போதும் இருப்பதில்லை

264-

உன் இறகை
கத்தரித்துவிட்டேனே
எப்படிப் பறப்பாய்

உன்னால்
எங்கள் இறகைதான்
கத்தரிக்கமுடியும்
சுதந்திரத்தையல்ல

265-

இன்றிரவு
தின்னப்போகிறவன் யார்
பசியோடு பார்க்கிறாள்

266-

எழுதிப் பார்த்த
கதை சொன்னது
இன்னும்
எழுதிப்பார் என்று

மாமிசப் பார்வை

மதுவின் உச்சத்திலிருந்தபோது
மதுக்கோப்பையின் மேல்
வந்தமர்ந்தது புறா

மெல்ல தடவியபடியே
பேசப் பார்த்தேன்

கண்களிலிருந்த
மாமிசப் பார்வை விரட்ட
பயந்தபடி
பறந்துபோனது

மதுக்கோப்பையின் உள்ளே
விழுந்துபோன இறகை
வெளியே எடுத்துப்போட்டு
குடித்தேன்

இறகின் துளிகளிலிருந்து
பறந்து சென்றன புறாக்கள்
மிதந்துகொண்டிருந்த என்னை
கீழே தள்ளிவிட்டு

Sunday, December 12, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

258-

எத்தனைப் பயணங்களை
குறித்து வைத்திருக்கும்
தண்டவாளம்

259-

அவனை நான்
இழக்கவில்லை
அவன் நானன்றி
வேறில்லை

260-

நீங்கள் தராவிட்டால்கூட
கேட்டுக்கொண்டிருப்பேன்
உங்களிடமிருந்து
பிறகு
பெற்றுக்கொண்டிருப்பேன்
என்னிடமிருந்து

அன்பின் மொழிகள்

1-

இது கவிதையல்ல
உன் பிரியங்களின்
பூக்கூடை

2-

பெருமிதம் கொள்கிறேன்
உன் அன்பின் முன்
அடிமையாகிப்
போவதை நினைத்து

3-

முழுக் கடலையும்
ஒற்றைத் துளியாக்கி
அன்பு என்று எழுதியபோது
கடலாகிப்போனது
அன்பு

4-

உயிர்
உடையும்போதெல்லாம்
காதல் சேர்த்துவிடுகிறது

5-

உனக்கான கவிதைகளை
எழுதிக்கொண்டிருக்கிறேன்
அதில் நீ
எனக்கான வாழ்த்துக்களைச்
சொல்லிக்கொண்டிருக்கிறாய்

Friday, December 10, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

254-

வார்த்தைகளுக்கிடையில்
உறுமும் புலி
தின்னும்
வெளியேறும்

255-

உள்ளிருக்கும்
எத்தனையோ
வெறும் மரம்
இதில் எங்கோ
ஒளிந்திருக்கும்
போதி மரம்

256-

தாண்டியவை
அரை கிணறுகள்
எல்லாவற்றிலும்
அவன் பிணம்

257-

மேலேறு

உன்
மேலேறு

உன்னைத்தூக்கி
மேலேறு

மேலேறு

வானம் பிடித்து
மேலேறு

வானம் தாண்டி
மேலேறு

மேலேறு

கீழ்

என் தலையணையின் கீழ்
உனது முத்தம்

முத்தத்தின் கீழ்
எனது முத்தம்

அதற்கும் கீழ்
தனிமையும்
இரவின் மதுவும்

Thursday, December 09, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

250-

சொல்லாத
உண்மைகளுக்குத் தெரியும்
சொன்ன பொய்களின்
கணக்கு

251-

என்னைத் தூக்கி எறிந்து
ஒதுங்குமா பிணம் எனப்
பார்த்திருந்தேன்

கடல் ஒதுங்கியது
கரையிலிருந்த
என்னைப் பார்த்தபடி

252-

எதிர்பார்த்ததுபோல்
இல்லை

எதை எதிர்பார்த்தீர்கள்

தெரியவில்லை

253-

அடைந்துவிட்டதாக
சொன்ன இடத்தை
இப்போதுதான்
அடைந்திருக்கிறேன்

அடையப்போகும்
இடத்தையும்
இப்படியே
அடைந்துவிடுவேன்

Saturday, December 04, 2010

ஒலிநாடா சுற்றிக்கொண்டிருக்கிறது

பதிவு செய்த
வரிகளில்
காகத்தின் குரலும்
ஒலித்தது

வரிகளில்
குதிக்கும் இசைபோல்
கேட்டது

கேட்கக் கேட்க
காகத்தின் குரல் நின்று
அது பாடலின் வரியை
ஒவ்வொன்றாய்
உட்கொண்டது

இறுதியில்
ஒலிநாடா சுற்றிக்கொண்டிருந்தது
எந்தவித
சத்தங்களுமற்று

அனுபவ சித்தனின் குறிப்புகள்

248-

மதம் பிடித்த கல்
யானையானது

249-

கேள்விகள்
திரும்பவும்
தேடிப் பெறுகின்றன
கேள்விகளை

பதில்களை
நிராகரித்து

தன்னிலிருந்து
எழவும்

பதில்கள் அல்லாத
ஒன்றைக்
கண்டெடுக்கவும்

Thursday, December 02, 2010

பார்த்தல்

உன் குறுஞ்செய்திகளை
அறுத்தெறிகிறேன்

பிரியங்களில்
கசியும் ரத்தத்தை
நிறமாகப்
பார்க்கப் போகிறேன்

ஒரு வரி

என்னைத் தவிர
யாராலும் உங்களைக்
கொல்ல முடியாது
என்று ஒரு வரி
எழுதி இருந்தது சுவரில்

படித்தவர்கள் எல்லோரும்
ஒரு கணம் இறந்து
மறுகணம்
பிழைத்துப் போனார்கள்

வருகை

உன் வெளிச்சத்தை
தொட வேண்டும் என்றேன்

விரலருகே வந்து
கசிந்துவிட்டுப் போனது
நட்சத்திரம்

நிரப்புதல்

ஜனனலோரம்
அமர்ந்திருந்தவரிடம்
பெயர் கேட்டேன்

பேசவில்லை

இறங்கும்போது சொன்னார்

பயணங்களை
காற்றால் நிரப்பு
பெயர்களால்
மூடி விடாதே

அனுபவ சித்தனின் குறிப்புகள்

244-

கனவிடமே
விட்டுவிடுகிறேன்
கனவின் குறிப்புகளை

245-

எதை நினைத்து
அழுகிறாய்

எதை நினைத்து
சிரித்தேனோ
அதை நினைத்து

246-

சொன்னவைகளை
அனாதையாய் விரட்டிவிட்டீர்கள்

சொல்லாதவைகளுக்கு
தண்டனை எழுதுகிறீர்கள்

247-

மழை
துளியிலமர்ந்து இறங்குகிறேன்
பூமிக்கு