Tuesday, October 24, 2017

குழப்பம்

எந்தக் கண்ணாடியிலும்
என் முகம் தெரியவில்லை
குழப்பமாக நான் பார்க்கிறேன்
குழப்பமாகக் கடைக்காரர் பார்க்கிறார்
குழப்பமாகக் கண்ணாடி பார்க்கிறது

Tuesday, October 10, 2017

சிறைக்கம்பிகளின் வழியே

சிறைக்கம்பிகளின் வழியே
அப்பா நிலவைப் பார்ப்பார்
நினைவுகள் முடிந்து போக
நிலவு மறைந்து போகும்
நிலா இல்லாத இரவில்
அப்பா எதைப் பார்ப்பார்
கேட்கிறது குழந்தை
அம்மா பதில் சொன்னாள்
உன்னை


Friday, October 06, 2017

அழித்து விட்டேன்


வழிப்போக்கன் நான்
சாலை விசாரிப்புகள்
போதும் எனக்கு
*
விடுகதைப் போட்டுவிட்டுப்
போகிறது பட்டாம்பூச்சி
வழியில் தென்படும்
வேறு ஒரு பட்டாம்பூச்சியிடம்
விடை கேட்க வேண்டும்
*
கை அசைவை
கிளை அசைவு கவனிக்கிறது
இந்த வரி
மனதில் அசைகிறது
*
நனைந்து
நடக்கும்போது
மழையும்
உடன் வருகிறது
*
நிழல் கடந்து
போகிறேன்
நினைவுகளில்
இளைப்பாறிக்கொள்ளலாம்
*
இரண்டு கால்கள் உறங்க
எதிரே நடந்து போகிறார்
எட்டுக் கால்களுடன்
நின்று நகர்கிறேன்
*
பேருந்து
காலியாக இருக்கிறது
நடத்துநர்
ஏறச் சொல்கிறார்
நிரம்பி இருக்கிறேன் நான்
போகச் சொல்கிறேன்
*
பயணம்
சொல்லப்போவதை
எழுத
இருந்த எல்லாவற்றையும்
அழித்து விட்டேன்